செய்திகள்

மோசமான வானிலை - ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரை இரண்டாவது நாளாக ரத்து

Published On 2018-08-14 11:38 GMT   |   Update On 2018-08-14 11:38 GMT
ஜம்முவில் மழையுடன் மோசமான வானிலை நிலவுவதால் பகவதிநகர் முகாமில் இருந்து புறப்பட்டு செல்லும் அமர்நாத் யாத்திரை தொடர்ந்து இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. #AmarnathYatra
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 535 யாத்திரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். மேலும் பலர் தரிசனத்துக்காக ஜம்மு மாவட்டத்தில் உள்ள பகவதிநகர் மலையடிவார முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், ஜம்மு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைப்பொழிவு உள்ளதால் யாத்திரை பாதையில் உள்ள நெடுஞ்சாலை மூடப்பட்டது.

பகவதிநகர் மலையடிவார முகாமில் இருந்து நேற்று யாத்ரீகர்கள் புறப்பட்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்றும் மோசமான வானிலை நிலவுவதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. #AmarnathYatra #AmarnathYatrasuspended  #Yatrasuspended  
Tags:    

Similar News