செய்திகள்

சத்தீஸ்கரில் அரசு கோசாலையில் மூச்சுதிணறி 18 பசுக்கள் பலி - இதுதான் பசு பாதுகாப்பு?

Published On 2018-08-05 13:16 GMT   |   Update On 2018-08-05 13:16 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் பசுக்களை பாதுகாக்கும் அரசு கோசாலையில் 18 பசுக்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #CowSafty
ராய்ப்பூர்:

இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு வன்முறைகள் நடைபெறுகின்றன. பசுக்களை இறைச்சிக்காக கடத்துவதாக கூறி, பலர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலவும் இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. ஆங்காங்கே இருக்கும் பசுக்களை மீட்டு, மாவட்ட நிர்வாகம் நடத்தி வரும் கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு மட்டுமே பசுக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பசுபாதுகாவலர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ரோஹாசி எனும் கிராமத்தில் இயங்கி வரும் அரசு கோசாலையில் 18 பசுமாடுகள் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் ஜானக் பிரசாத் பதக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோசாலையில் இருந்து இறந்த பசுக்களின் உடல்களை எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, அங்கு பசுக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், அவற்றுக்கு தேவையான உணவை கிராம மக்களும், கோசாலை நிர்வாகிகளும் வழங்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மிகச்சிறிய அறையில் வைத்து பூட்டப்பட்ட அதிகப்படியான பசுக்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கலெக்டர் ஜானக் பிரசாத் தெரிவித்துள்ளார். #CowSafty
Tags:    

Similar News