செய்திகள்

தூக்கில் தொங்கிய 4-ம் வகுப்பு மாணவன் - டார்ஜீலிங் உறைவிடப் பள்ளியில் பரபரப்பு

Published On 2018-07-22 15:34 GMT   |   Update On 2018-07-22 15:34 GMT
மேற்குவங்காளம் மாநிலம் டார்ஜீலிங்கில் உள்ள உறைவிடப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WestBengal
கொல்கத்தா:

பீகார் மாநிலம் பாட்னா நகரைச் சேர்ந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன், மேற்குவங்காளம் மாநிலம், குளுகுளு பிரதேசமான டார்ஜீலிங்கில் உள்ள மிகப்பிரபலமான உறைவிடப் பள்ளியில் தங்கியவாறு நான்காம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், நேற்று இரவு உணவு வேளையின் போது சிறுவனை காணாத விடுதி காப்பாளர், அவனது அறைக்கு தேடிச் சென்றார். அப்போது, அந்த அறையின் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் தூக்கில் அவன் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த காப்பாளர், உடனடியாக தூக்கில் இருந்து சிறுவனை கழற்றி, அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி, சிலுகுரியில் உள்ள வடக்கு வங்காளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தங்கள் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள சாத்தியமில்லை எனவே இந்த வழக்கை கொலை என்ற கண்ணோட்டத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் போலீசாரை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தரமான கல்வியைத் தேடி, பீகார் மாநிலத்தில் இருந்து மேற்குவங்காளம் வந்து படித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WestBengal
Tags:    

Similar News