செய்திகள்

திருப்பதி கோவிலில் மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மீண்டும் இலவச தரிசனம்

Published On 2018-07-07 04:02 GMT   |   Update On 2018-07-07 04:02 GMT
திருப்பதியில் மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்கான இலவச தரிசனங்களை தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியுள்ளது. #TirupatiTemple
திருமலை:

திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனத்தை வழங்கி வருகிறது.

எனினும், மே, ஜூன் மாதங்களில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது. அதனால் இந்த இரு தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்தது.

இந்நிலையில், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதால், மீண்டும் இம்மாதம் முதல் அந்த தரிசனத்தை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

அதன் படி வரும் 10 மற்றும் 24-ந் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர் மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் வீதம் இரு நாட்களில் 8 ஆயிரம் பேர் இலவசமாக ஏழுமலையானை தரிசிக்கலாம்.

அதேபோல் இம்மாதம் 11 மற்றும் 25-ந் தேதி ஆகிய இரு நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது.

தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple
Tags:    

Similar News