செய்திகள்

வீட்டுச்சுவற்றில் 11 பைப்புகள் எதற்கு? - மர்மக் கதைகளை விஞ்சும் 11 பேரின் மரணம்

Published On 2018-07-03 17:36 IST   |   Update On 2018-07-03 17:36:00 IST
டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்த சம்பவத்தில், போலீசாரே குழம்பும் அளவுக்கு மர்மங்கள் நிறைந்துள்ளன. #BurariDeathMystery
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

10 பேர் கண்கள் மற்றும் வாயை கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், 77 வயதான மூதாட்டி மட்டும் கட்டிலில் கிடந்தபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சோக சம்பவத்துக்கு உத்தரவு பிறப்பித்ததுபோல், காணப்படும் மர்ம டைரி  அவர்களது வீட்டில் கிடைத்தது. 

முக்திப்பேறு பெறுவதற்காக சில சடங்குகள் செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் காணப்படும் அந்த டைரியில், ‘இந்த சடங்கை (தற்கொலை) செவ்வாய், வியாழன் அல்லது சனிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். அந்த சடங்கை செய்யும் நாளில் வீட்டில் யாரும் சமைக்க கூடாது. கைபேசிகளை ஆறு மணி நேரத்துக்கு ‘சைலண்ட் மோட்’-ல் வைத்துவிட வேண்டும். அனைவரும் தூக்கிட்டு கொண்டார்களா? என்பதை கண்காணிக்க ஒருவர் காவலுக்கு நிற்க வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது அந்த குடும்பத்தில் உள்ள பத்து பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை உறுதிப்படுத்திய பின்னர் தரையில் இறந்துகிடந்த 75 வயது மூதாட்டி தனது முடிவை தேடிகொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சடங்குகளை செய்வதால் ஒருவர் இறந்துப் போவதில்லை. கடவுளால் காப்பாற்றப்பட்டு உயர்வான ஸ்தானத்தை பெறுவார்கள் எனவும் அந்த கடிதம் குறிப்பிடுகின்றது.



இதேபோல,  சம்மந்தமே இல்லால் அவர்கள் வீட்டுச் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த 11 பைப்புகள் மரணத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 பைப்புகள் நேரானதாகவும், 7 பைப்புகள் வளைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 4 ஆண்களுக்கு நேரான பைப், மீதமுள்ள வளைந்த பைப்புகள் 7 பெண்களை குறிப்பதாக பலர் தெரிவிக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்டதும் அவர்களது ஆன்மா வெளியேற இந்த பைப்புகள் பதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அவர்கள் வீட்டில் சமீபத்தில் கட்டிட பணி நடந்த போது பணியாற்றிய ஒருவர் கூறுகையில், 11 பைப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு காற்று வெளியேறும் வகையில் அது வைக்கப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர்.

ஆனால், அந்த பைப்புகள் முறையிட்ட முறையில் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக வெளிச்சத்திற்காகவோ, காற்று வெளியேறுவதற்காகவோ அது இருக்காது என அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News