செய்திகள்

பலத்த மழையால் மும்பை அந்தேரியில் பாலம் இடிந்து 6 பேர் காயம்

Published On 2018-07-03 13:41 IST   |   Update On 2018-07-03 13:41:00 IST
பலத்த மழை காரணமாக இன்று காலை மும்பை அந்தேரியில் ரெயில்வே நடைமேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
மும்பை:

மும்பையில் கடந்த சில மாதங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்றிரவும் மும்பையில் பல இடங்களில் மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.

பலத்த மழை காரணமாக மும்பை அந்தேரியில் ரெயில்வே நடைமேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இன்று காலை 7.30 மணிக்கு அந்த பாலம் இடிந்தது.

பாலத்தின் ஒரு பகுதி ரெயில் தண்டவாளங்கள் மீது விழுந்தது. அந்த சமயத்தில் ரெயில்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது.

பாலம் இடிந்ததில் அந்த பகுதியில் நின்றவர்களில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தண்டவாளத்தின் மத்தியில் பாலம் விழுந்ததால் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு ஒரு வழித்தடத்தில் ரெயில் சேவை முடங்கியது. இது லட்சக்கணக்கான பயணிகளை தவிக்க வைத்தது.


இடிந்து விழுந்த கோகலே சாலை பாலம்தான் மேற்கு அந்தேரியையும் கிழக்கு அந்தேரியையும் இணைக்கும் பாலமாக திகழ்ந்தது. பாலம் இடிந்ததால் அந்தேரிகள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் வழியாகத் தான் டப்பாவாலாக்கள் உணவு பாத்திரகளை எடுத்து செல்வார்கள். பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுக்கு அவர்கள் சேவை தான் முக்கியமானதாகும்.

இணைப்பு பாலம் இடிந்ததால் டப்பாவாலாக்கள் தங்கள் சேவையை இன்று நிறுத்தியுள்ளனர். #MumbaiRain
Tags:    

Similar News