செய்திகள்

கிரண்குமார் ரெட்டி மீண்டும் காங்கிரசுக்கு திரும்புகிறார்

Published On 2018-06-28 16:51 IST   |   Update On 2018-06-28 16:51:00 IST
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி மீண்டும் காங்கிரசுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. #kirankumarreddy #congress #rahulgandhi

ஐதராபாத்:

பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில் மிக வலுவான கட்சியாக காங்கிரஸ் இருந்து வந்தது. இதற்கு முன்பு டாக்டர் ராஜசேகர் ரெட்டி காங்கிரஸ் முதல்-மந்திரியாக இருந்தார். 2009-ல் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் மரணம் அடைந்ததையடுத்து ரோசைய்யா முதல்-மந்திரி ஆனார்.

பின்னர் அவர் மாற்றப்பட்டு 2010-ம் ஆண்டு கிரண்குமார் ரெட்டி முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். 2014 வரை அவர் தொடர்ந்து முதல்-மந்திரியாக இருந்தார்.

இந்த நேரத்தில் ஆந்திரா இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு மாநில காங்கிரஸ் தரப்பிலிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆந்திர காங்கிரசார் பலர் கட்சியில் இருந்து விலகினார்கள். முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டியும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியை விட்டு விலகினார்.

இதனால் ஆந்திராவில் காங்கிரஸ் படுபாதாளத்திற்கு சென்றது. சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாத அளவிற்கு பின்னடைவை சந்தித்தது.

தற்போது காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவராக கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற காங்கிரஸ் தலைவர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டுவந்து பழைய மாதிரி கட்சியை வலுப்படுத்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

இதன் ஒரு அங்கமாக முன்னாள் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டியை காங்கிரசில் சேரும்படி உம்மன்சாண்டி வற்புறுத்தி வருகிறார். காங்கிரசை விட்டு விலகியதும் கிரண்குமார் ரெட்டி ஜெய்சமைக்கிய ஆந்திரா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். ஆனால் அந்த கட்சி எடுபட வில்லை.

இதனால் தீவிர அரசியலில் இல்லாமல் அமைதி காத்து வந்தார். கிரண்குமார் ரெட்டி ஒரு ஆண்டுக்கு முன்பு ராகுல்காந்தியை திடீரென சந்தித்தார். அப்போதே அவர் காங்கிரசில் சேரப்போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் மவுனம் ஆகிவிட்டார்.

இப்போது காங்கிரசில் சேரும் முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். அடுத்த மாதம் 3-ந்தேதி அல்லது 4-ந்தேதி அவர் டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்பிறகு அவர் முறைப்படி கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று ஒ.எஸ்.ஆர். காங்கிரசில் இணைந்து செயல்பட்டு வரும் பல பிரமுகர்களையும் காங்கிரசுக்கு இழுக்க முயற்சி நடக்கிறது.

காங்கிரசில் முன்னணி தலைவர்களாக இருந்து தற்போது வெளியில் இருக்கும் ஹர்சகுமார், ராஜ சேகர ரெட்டி, அனந்தராம நாராயண ரெட்டி, ராமபுல்ல ரெட்டி போன்றோரையும் இழப்பதற்கு முயற்சி நடந்து வருகிறது.

இவ்வாறு காங்கிரசில் பழைய தலைவர்களை ஒருங்கிணைந்து கட்சியை பலப்படுத்துவதுடன், பல சிறிய கட்சிகளுடன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாக்கவும் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. #kirankumarreddy #congress #rahulgandhi

Tags:    

Similar News