செய்திகள்

கவர்னர் சுற்றுப்பயணம் செய்வதை குறைத்துக் கொள்வது நல்லது- திருநாவுக்கரசர்

Published On 2018-06-26 03:47 GMT   |   Update On 2018-06-26 03:47 GMT
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுப்பயணம் செய்வதை குறைத்துக்கொள்வது நல்லது என்று திருநாவுக்கரசர் கூறினார்.#banwarilalpurohit
புதுடெல்லி:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் டெல்லி வந்தார். ஒரு வாரம் டெல்லியில் தங்கியிருந்த அவர் நேற்று தமிழகத்துக்கு புறப்பட்டார். முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர்கள் அசோக் கெலாட், முகுல்வாஸ்னிக் உள்ளிட்டோரை சந்தித்து கட்சி நிர்வாகம் சம்பந்தமாக பேசினேன். கட்சிப்பணிக்காக ஏற்கனவே 26 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். அடுத்து நாளை (புதன்கிழமை) மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன். இன்னும் 16 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியுள்ளது.

ஜூலை முதல் வாரத்தில் முகுல்வாஸ்னிக் தமிழகம் வந்து 4 மாவட்ட சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்கிறார். தமிழகத்தில் கவர்னரின் ஆய்வு பயணத்தை நானும் கண்டித்து இருக்கிறேன். கவர்னர் என்பவர் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பாலமாக இருந்து, மாநிலத்துக்கு தேவையான நிதி கிடைக்க உதவியாக இருக்க வேண்டும். அதை விடுத்து ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்ய தேவை இல்லை. இதை குறைத்துக்கொள்வது அவருக்கு நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

குஷ்பு விவகாரம் குறித்து திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. இங்கு ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள். நான் தலைமை ஏற்றபின்னர் கட்சியில் எந்த பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை. யாருடனும் கருத்துவேறுபாடு இல்லை. தமிழகம் முழுவதும் ராகுல்காந்தி அணியாகத்தான் உள்ளது. குஷ்புவை பற்றியே ஏன் அதிகம் கேட்கிறீர்கள்? குஷ்பு என்ன பெரிய தலைவரா? குஷ்புவுடன் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பத்திரிகைகள் தான் அதுபற்றி பெரிதாக பேசிக்கொள்கின்றன’ என்றார்.

பேட்டியின்போது மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் அமீர்கான், வக்கீல் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #banwarilalpurohit
Tags:    

Similar News