செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமிக்கவும் - மத்திய நீர்வளத்துறை கடிதம்

Published On 2018-06-02 10:18 IST   |   Update On 2018-06-02 10:18:00 IST
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, ஆணையத்துக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது. #CauveryManagementAuthority
புதுடெல்லி:

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது.

இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு நேற்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். மேலும், ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத்துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார் என்றும் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு மத்திய நீர்வளத்துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நீர்வளத்துறை சார்ந்த நிர்வாக செயலர் அந்தஸ்தில் ஒருவரையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிற்கு தலைமை பொறியாளர் அந்தஸ்தில் ஒருவரையும் உறுப்பினராக நியமிக்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளும் உறுப்பினர்களை நியமிக்குமாறு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. #CauveryManagementAuthority
Tags:    

Similar News