செய்திகள்

கைரானா மக்களவை தொகுதியில் 54 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2018-05-29 04:54 IST   |   Update On 2018-05-29 04:54:00 IST
உ.பி.யின் கைரானா மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி எம்.பியான பா.ஜ.க.வை சேர்ந்த ஹுகும் சிங் கடந்த பிப்ரவரியில் காலமானார். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா-கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 4 மக்களவை தொகுதிகளுக்கும் மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், உ.பி.யின் கைரானா மக்களவை தொகுதியில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் கைரானா தொகுதியில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா - கோண்டியா தொகுதியில் 42 சதவீதமும், பால்கர் தொகுதியில் 46 சதவீதம் வாக்குப்பதிவும் நடைபெற்றது.

மேலும், நாகாலாந்தின் ஒரு தொகுதியில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



நேற்று இடைத்தேர்தல் நடைபெற்ற மக்களவை தொகுதிகளின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர வேலை செய்யவில்லை என எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிக வெப்பத்தின் காரணமாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர வேலை செய்யவில்லை. மக்களவை தொகுதிகள் இடைத்தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 31-ம் தேதி தொடங்கி, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
Tags:    

Similar News