செய்திகள்

தெலுங்கானா, கர்நாடகாவில் குழந்தை கடத்தல் பீதியில் 4 பேர் அடித்துக்கொலை

Published On 2018-05-25 05:05 GMT   |   Update On 2018-05-25 05:05 GMT
தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் குழந்தை கடத்தல் பீதியில் 4 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்:

தமிழகத்தில் வடமாநில குழந்தை கடத்தல் கும்பல் புகுந்து இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.

குழந்தை கடத்தல் பீதியில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி என்பவர் கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இதே போல் பழவேற்காட்டில் மனநோயாளி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு உடல் பாலத்தில் தூக்கி தொங்க விடப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தற்போது தமிழகத்தில் ஓய்ந்து உள்ள குழந்தை கடத்தல் பீதி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் பரவி உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் 4 பேர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்று குழந்தை கடத்த வந்ததாக நினைத்து ராஜஸ்தானை சேர்ந்த காலூராம் (வயது26) என்பவரை பொதுமக்கள் அடித்து கொலை செய்தனர்.

பின்னர் அவரது கை, கால்களை கயிற்றில் கட்டி இழுத்து சென்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பாக 4 பெண்கள், 2 சிறுவர்கள் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை தேடி வருகிறார்கள்.

இதே போல் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 4 நாட்களில் குழந்தை கடத்தல் பீதியில்3 பேர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

குண்டூர் மாவட்டம் ரேபல்லி பகுதியில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். இதே போல் கோதாகூடம் மாவட்டம் சரபக்கா பகுதியில் மனநலம் பாதித்த வாலிபர் தாக்கப்பட்டார்.

நிசாமாபாத் மாவட்டம் போடன் பகுதியில் வாய்பேச முடியாத ஒருவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்தி பேசியதால் குழந்தை கடத்தல் பீதியில் அவரை பொது மக்கள் தாக்கி உள்ளனர்.

தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா பகுதியில் குழந்தை கடத்தல் பீதி தொடர்பான வீடியோக்கள் பரவி வருகின்றன. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News