செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் விஷ சாராயம் அருந்தி 9 பேர் பரிதாப பலி - ஒப்பந்ததாரர் ஓட்டம்

Published On 2018-05-20 11:07 GMT   |   Update On 2018-05-20 11:07 GMT
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் டெகாட் மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #poisonoushooch
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் நேற்று இரவு துல்கான் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற நாட்டு சாராய கடையில் சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டு நேற்று இரவே 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களில் மேலும் 5 பேர் அடுத்தடுத்து பலியாகினர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. மேலும், விஷ சாராயம் அருந்திய பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடை உரிமையாளரை கைது செய்யும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், மது வியாபாரியும், ஒப்பந்ததாரரும் தலை மறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கடையில் உள்ள சாராயம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். #poisonoushooch
Tags:    

Similar News