செய்திகள்

கர்நாடகாவில் தொங்கு சட்டசபை என கருத்து கணிப்புகள் - குமாரசாமிக்கு சாதகமாக களம்?

Published On 2018-05-13 10:24 IST   |   Update On 2018-05-13 10:24:00 IST
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்புகள் கூறும் நிலையில், அம்மாநில அரசியல் களம் குமாரசாமிக்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்படுகிறது. #KarnatakaElections
பெங்களூர்:

கர்நாடகாவில் நேற்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. வரும் 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, இப்போதே பதவியேற்கப்போகும் நாளை தெரிவித்து விட்டார்.

எடியூரப்பா மனநலம் சரியில்லாமல் பேசி வருகிறார் என சித்தராமையாவும் பதிலடி கொடுத்துள்ளார். தேசிய கட்சிகளே ஆண்டுள்ள கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்துள்ளது. முந்தைய தேர்தல்களில் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாகவும் இந்த கட்சி இருந்துள்ளது.

குறிப்பாக 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு குமாரசாமி (மஜத தலைவர்) ஆதரவளிக்க காங்கிரஸ் ஆட்சியமைத்தது. 2006-ம் ஆண்டு ஆதரவை திரும்ப பெற்றதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதன் பின்னர், பாஜக - மஜத இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது.

மீதமுள்ள ஆட்சி காலத்தில் குமாரசாமி முதல்வராகவும், அதன் பின்னர், எடியூரப்பா முதல்வராக இருப்பார் எனவும் உடன்பாடு செய்யப்பட்டது. அதன்படி குமாரசாமி முதல்வரானார். 2007-ம் ஆண்டு அக்டோபரில் பதவியை விட்டுக்கொடுக்க குமாரசாமி தயாரானாலும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆட்சியை விட்டுக்கொடுக்கவில்லை.



இதனால், கொதிப்படைந்த எடியூரப்பா ஆதரவை வாபஸ் பெற்றதால் குமாராசாமி அரசு கவிழ்ந்தது. இதனை அடுத்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இம்முறை காங்கிரஸ், பாஜக எனும் இருபெரும் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றே கருத்து கணிப்புகள் கூறுகின்றது.

அப்படி தொங்கு சட்டசபை அமைந்தால், அது குமாரசாமிக்கு அடிக்கும் யோகமாக இருக்கும். மஜத 30 தொகுதிகள் வரை வெல்லும் என கருத்து கணிப்புகள் கூறும் நிலையில், மஜக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. அப்படி நடக்கும் பட்சத்தில், பாஜகவானது குமாரசாமியுடன் கைகோர்க்க தயங்காது.

ஒருவேலை காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று பெரும்பான்மை இல்லை என்றால், அது சிக்கல் தான், ஏனென்றால், சித்தராமையா மஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தவர். இதனால், குமாரசாமியுடன் கைகோர்க்க அவர் விரும்ப மாட்டார் என்றே தெரிகிறது.

அரசியலில் எதுவும் எதிர்பார்க்காததுதான், அகிலேஷ்யாதவ் - மாயவதி கைகோர்த்தது போல, இதுவும் நடக்கலாம். எப்படி இருந்தாலும், கர்நாடக தேர்தல் களத்தில் எளிதான வெற்றி என்பது எந்த கட்சிக்கும் சாத்தியமில்லை என்பதால், வாக்கு எண்ணிக்கைக்கு பின்னரும் அம்மாநில அரசியல் பரபரப்பானதாகவே இருக்கும். #KarnatakaElections
Tags:    

Similar News