செய்திகள்

வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்துக்கு 25 வீடுகள்: நடிகர் விவேக் ஓபராய் வழங்கினார்

Published On 2017-05-14 05:39 IST   |   Update On 2017-05-14 05:39:00 IST
பாதுகாப்பு பணிகளின் போது வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்துக்கு 25 வீடுகளை நடிகர் விவேக் ஓபராய் வழங்கினார்
புதுடெல்லி:

பாதுகாப்பு பணிகளின் போது வீரமரணம் அடையும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சி.ஆர்.பி.எப்.) குடும்பத்தினருக்கு உதவ நன்கொடைகளை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த அழைப்பை ஏற்று பல்வேறு பிரபலங்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி இந்தி நடிகர் விவேக் ஓபராய், 25 வீடுகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்பை வழங்கி உள்ளார். மும்பை அருகே உள்ள தானேயில் கட்டப்பட்டு உள்ள இந்த வீடுகள் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் 3 வீடுகள், சமீபத்தில் சத்தீஷ்காரில் நடந்த நக்சலைட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 3 வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள வீடுகளுக்கும் பயனாளிகள் பட்டியலை இறுதி செய்து வருவதாக கூறியுள்ள சி.ஆர்.பி.எப். அதிகாரிகள், இந்த வீடுகள் தானேயில் உள்ளதால், மராட்டியத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார். இந்த வீடுகளை வழங்கியதற்காக நடிகர் விவேக் ஓபராய்க்கு சி.ஆர்.பி.எப். நன்றி தெரிவித்து உள்ளது.

முன்னதாக மற்றொரு இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், சத்தீஷ்கார் தாக்குதலில் உயிரிழந்த 12 வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.9 லட்சம் வீதம் வழங்கினார். இதைப்போல பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கி இருந்தார். 

Similar News