நள்ளிரவில் கோரம்: சாலை விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்
- 10 பெண்கள், 2 சிறுமிகள், 1 சிறுவன் மற்றும் 6 மாதக் குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.
- பல பயணிகள் சிதைந்த வாகனத்துக்குள் சிக்கியிருந்தனர்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சட்டவுட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ராய்ப்பூர்- பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே, பனார்சி கிராமத்தில் திருமண விழாவில் கலந்து கொண்டு, இரவு 12.15 மணியளவில் மினி லாரியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வேகமாக வந்த டிரெய்லருடன் மோதியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 10 பெண்கள், 2 சிறுமிகள், 1 சிறுவன் மற்றும் 6 மாதக் குழந்தை ஆகியோர் அடங்குவர்.
மேலும் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு கரௌரா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் உள்ளுர்வாசிகளுடம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல பயணிகள் சிதைந்த வாகனத்துக்குள் சிக்கியிருந்ததால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டது.