ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: சித்தராமையாவின் அரசியல் செயலாளர் நீக்கம், உளவுத்துறை தலைவர் மாற்றம்..!
- ஒரே நேரத்தில் 3 நிகழ்ச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- கமிஷனர் மறுப்பு தெரிவிக்க 2 நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று முன்தினம் ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்துவது. அதன்பின் ஆர்சிபி வீரர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரை ரோடு ஷோ நடத்துவது, அதன்பின் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் என மூன்று நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள வாய்ப்புள்ளதால், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படும் என போலீசார் எச்சரித்ததால் பேரணி ரத்து செய்யப்பட்டது.
அதேவேளையில் விதான சவுதாவில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உளவுத்துறை தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்ட நெரிசல் நடைபெற்ற புதன்கிழமை காலை, சித்தராமையா வீட்டில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது போலீஸ் கமிஷனர் மூன்று நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என மறுத்துள்ளார். ஆனால் மூன்று நிகழ்ச்சிகளும் நடைபெற வேண்டும் என சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜ் வலியுறுத்தியதாக தெரிகிறது.
ஆனால் போலீஸ் கமிஷனர் பிடிவாதமாக இருக்க, விதான சவுதா மற்றும் சின்னசாமி மைதான நிகழ்ச்சிகளுக்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதனால் கோவிந்தராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.