செய்திகள்

தமிழகத்துக்கு மந்திரி பதவி கிடைக்குமா?- தமிழிசை பேட்டி

Published On 2019-05-31 10:36 GMT   |   Update On 2019-05-31 10:36 GMT
தமிழகத்துக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பிரதமர் மோடி முடிவு எடுப்பார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்று கொண்ட அற்புதமான நிகழ்விற்கு கட்சிக்காக உழைத்த தொண்டர்களான மாவட்ட தலைவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் போலவே அழைப்பு விடுத்து அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இது தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தி பணியாற்றுவோம்.

இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும். மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்லும்.

இன்னும் பல வெற்றிகள் பல மாநிலங்களில் குவிக்க இருக்கிறது. தமிழகத்திலும் பா.ஜனதா பலம் பெற இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா பலம் பெற பலம் பெற தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

மக்களுக்கு எதிரான, மக்களுக்குத் துன்பம் தரக் கூடிய பிரச்சனைகளை இந்த அரசு ஆதரிக்க போவதில்லை, பாஜகவிற்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்ற தவறான பிரசாரம் எதிர்கட்சிகளால் செய்யப்படுகிறது. பா.ஜனதா தமிழகத்தின் மீது மிகுந்த அக்கறையோடு இருக்கிறது. பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அடிப்படையில் எங்களுடைய பணி இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உங்கள் கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் பெயரை தமிழகத்திலிருந்து மேலிடத்திற்கு பரிந்துரை செய்வீர்களா? என்ற கேள்விக்கு,

‘இதுகுறித்து கட்சி தலைமையும், பிரதமர் மோடியும் தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போது அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News