செய்திகள்
கோப்புப்படம்

புல்வாமா தாக்குதல் நடத்தியது மோடி- பிரேமலதா சர்ச்சை பேச்சுகள்

Published On 2019-04-10 09:28 GMT   |   Update On 2019-04-10 09:28 GMT
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரேமலதாவின் சர்ச்சை பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. #LoksabhaElections2019 #PremalathaVijayakanth
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்னும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்கிறார். ஆனால் அவர் பிரசாரத்தின்போது சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளார்.


கோவையில் பிரேமலதா பிரசாரத்தில் பேசும்போது, புல்வாமா தாக்குதலை நடத்திய தைரியமிக்க பிரதமர் மோடி என்றார். பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலை மோடி நடத்தினார் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானில் உள்ள பாலாகோட்டில் இந்திய விமானப்படை புகுந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. அதை அவர் சுட்டிகாட்டி பேசும்போது பாலாகோட் என்று சொல்வதற்கு பதில் புல்வாமா என்று கூறிவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அமைச்சர் விஜயபாஸ்கர் அருகில் இருந்தபோதே ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ என்று கூறினார்.

பின்னர் பொள்ளாச்சி பகுதியில் பேசியபோது, பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா பேசும்போது, எம்.ஜி.ஆர் பாடல்களை மட்டுமே விஜயகாந்த் பாடுவார் என்றும் ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ என்ற பாடலை விஜயகாந்த் விரும்பி பாடுவார் என்றார். ஆனால் அந்த பாடல் சிவாஜிகணேசன் நடித்த ‘பச்சைவிளக்கு’ படத்தில் இடம் பெற்றதாகும்.

இதைகேட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் திகைப்படைத்தனர். பிரேமலதாவின் இந்த பிரசார சர்ச்சை பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அ.தி.மு.க- தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது நிருபர்களுக்கு பிரேமலதா பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களை ஒருமையில் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #LoksabhaElections2019 #PremalathaVijayakanth
Tags:    

Similar News