செய்திகள்
தஞ்சை பர்மா காலனி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்த போது எடுத்த படம்.

எடப்பாடி மக்கள் முதல்வர் அல்ல- தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

Published On 2019-04-10 13:39 IST   |   Update On 2019-04-10 13:39:00 IST
எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலை பிடித்து பதவிக்கு வந்தவர் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என்றும் தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #UdhayanidhiStalin
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.கே.ஜி நீலமேகம் ஆகியோருக்கு வாக்குகேட்டு, தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்தார்.

தஞ்சை பர்மா காலனி, கீழவாசல், வடக்கு வீதி மானம்புசாவடி , கீழராஜ வீதி, அண்ணா நகர் மார்க்கெட் பகுதி ஆகிய இடங்களில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். இதை மோடி எதிர்ப்பு அலை என சொல்லுகிறார்கள். ஆனால் இது ஸ்டாலின் ஆதரவு அலையே. கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது, மோடி வரவில்லை.

வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார். ஆனால் அனைவருக்கும் நாமம் தான் போட்டார். அதே நாமத்தை நாமும் வருகிற 18-ந்தேதி தி.மு.க.விற்கு வாக்களித்து மோடிக்கு போட வேண்டும்.

நீட் தேர்வினால் அனிதா தற்கொலை செய்துக் கொள்ளவில்லை. மோடியால் தான் உயிரிழந்தார். அதற்கு துணை போனவர்கள் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கடந்த ஐந்தாண்டுகளில் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகி விட்டது.



மக்கள் ஓட்டு போட்டு எடப்பாடியை முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. சசிகலாவின் காலை பிடித்து தான் அவர் முதல்வரானவர். அவர் மக்கள் முதல்வர் இல்லை.

தற்போது நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் அடுத்த மாதம் நடக்கும் மீதமுள்ள 4 சட்டமன்றங்களுக்கான இடைத்தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக மாறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். வருகிற ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க நாம் சபதம் ஏற்போம்.

எனவே இந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று மத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் விரட்டி அடிப்போம்.

இவ்வாறு அவர்கூறினார். #LokSabhaElections2019 #UdhayanidhiStalin
Tags:    

Similar News