செய்திகள்

பா.ஜனதா எதிர்ப்பு அலையால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - முத்தரசன்

Published On 2019-03-31 05:23 GMT   |   Update On 2019-03-31 05:23 GMT
பா.ஜனதா எதிர்ப்பு அலையால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #Mutharasan

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். ஆளும்மோடி அரசின் மீதான இந்த எதிர்ப்பு எங்கள் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்.

பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணி நிர்பந்தத்தினால் உருவான கூட்டணி. ஆனால் மதசார்பற்ற கூட்டணி கொள்கைகளின் அடிப்படையில் புரிந்து கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டணி.

மோடி மட்டுமே தேசத்தை பாதுகாக்கும் தலைவர் போல் முன்னிலைப்படுத்துகிறார்கள். நேரு மிகப் பெரிய தலைவர். அவரது மறைவுக்கு பிறகு நாட்டை பாதுகாக்கப் போகும் தலைவர் யார்? என்ற பயம் நாடு முழுவதும் எழுந்தது. லால்பகதூர், சாஸ்திரி அடுத்த பிரதமராக வந்தார்.



அந்த கால கட்டத்தில் பாகிஸ்தானை போரில் தோற்கடித்தோம். நாட்டின் பன்முகத்தன்மையை கட்டிக் காக்கும் பல தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

எங்கள் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. தி.மு.க. கிறிஸ்தவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கிறது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பது எங்கள் கூட்டணி தான் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பா.ஜனதாவுக்கு சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லை. அதனால் தான் மதத்தை ஒரு ஆயுதமாக கையில் எடுத்துள்ளார்கள்.

ஆனால், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் இந்துக்களும் பாதிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan

Tags:    

Similar News