செய்திகள்

ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபடுவோம் - வைகோ பேச்சு

Published On 2019-03-29 06:27 GMT   |   Update On 2019-03-29 06:27 GMT
மத்திய அரசை தூக்கியெறிந்து ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தின்போது கூறினார். #LokSabhaElections2019 #Vaiko
விழுப்புரம்:

விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை ஆதரித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜனநாயகமா?, பாசிசமா? என்ற கேள்விக்கு விடைகாணும் தேர்தல் இந்த தேர்தல். ஜனநாயகத்தை பாதுகாக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைந்துள்ளது. எதிர்காலத்தில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற ஒற்றைத்தன்மையை திணிப்பதற்கு கடந்த 5 ஆண்டுகாலத்தில் கேடு விளைவித்தது மத்திய அரசு.

மேலும் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடு செய்து கொடுத்து தமிழகத்தின் தஞ்சை தரணியை பஞ்சபிரதேசத்திற்கு கொண்டு செல்ல திட்டத்தை வகுத்து கொடுத்தது.

இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு திட்டங்களுக்காக நிலங்களை அபகரித்து வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, விவசாயிகளை நசுக்குகிறது. இப்படிப்பட்ட மத்திய அரசை தூக்கியெறிந்து ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் வணிகர்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.2 ஆயிரம் கோடி உள்ளது. அதனை விவசாயிகளுக்கு பெற்றுத்தர ஊழல் நிறைந்த அரசு தயாராக இல்லை. மத்திய அரசின் வஞ்சகத்தில் இருந்து தமிழகத்தை காக்க முடியாத அரசு உள்ளது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்களுக்காக நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பருப்பு கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல், உள்ளாட்சி துறையில் டெண்டர் விடுவதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் ஊழல், குட்கா ஊழல் இப்படி எங்கும் ஊழல் நிறைந்துள்ளது. இன்றைக்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.

மருத்துவமனைகளுக்கு சென்றால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. நோயுடையவரின் ரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை நடந்துள்ளது. தற்போது ஓசூர் உள்ளிட்ட இடங்களில் ரத்தம் ஏற்றப்பட்ட 15 கர்ப்பிணிகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும், கல்விக்கடன், விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Vaiko

Tags:    

Similar News