செய்திகள்

தேனி தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

Published On 2019-03-24 11:08 GMT   |   Update On 2019-03-24 13:07 GMT
தேனி தொகுதியை பொறுத்தவரை பெரிய போட்டியாக கருதவில்லை. அத்தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். #evkselangovan #congress #parliamentelection

மதுரை:

தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ‌மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.‌ அவர் கூறியதாவது:-

தேனி தொகுதியை பொறுத்தவரை பெரிய போட்டியாக கருதவில்லை. தேனி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க ஆட்சியின் மூலம் பல கஷ்டங்கள் தான் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில் அ.தி.மு.க., பா.ஜ.க கட்சிகள் கூட்டணியை தோற்கடிக்க முடிவெடுத்துள்ளனர்.

ஆகவே நான் தேனி தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவேன், காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

நான் ஈரோடு, திருப்பூரில் வேட்பாளராக நிற்க விரும்பினேன். ஆனால் தோழமைக் கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை வழங்க வேண்டிய சூழல் அமைந்ததால் காங்கிரஸ் தலைமை என்னை தேனி தொகுதியில் போட்டியிட கேட்டுக் கொண்டது.

எனக்கும், எங்கள் குடும்பத்துக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள தொடர்பானது இறுக்கமானது.

அதனால் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் நின்றாலும் எனக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தேனி தொகுதி என்பது அ.தி.மு.க.வின் கோட்டை என்று கருதுபவர்களுக்கு அதைப்பற்றி எந்தக் கருத்தும் இல்லை.

ஜெயலலிதாவை நான் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளேன், ஆனால் அரசியல் ரீதியாக மட்டும் தான் விமர்சித்துள்ளேன்.

தனிப்பட்ட முறையில் ஒருமையில் அவரை விமர்சித்ததே கிடையாது. அரசியலில் ஜெயலலிதாவை நான் பல இடங்களில் பல நேரங்களில் விமர்சித்து இருந்தாலும் ஒரு பெண் சாதனையாளர் என்ற முறையில் எனக்கு ஜெயலலிதாவைப் பற்றி மிகுந்த மரியாதை உள்ளது.


கூட்டணி தலைவர்களை சந்தித்து அவர்களிடம் நேரம் கேட்டு நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.

என் அருமை தம்பி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக உள்ள ரவீந்திரநாத்குமார் எனக்கு தேனி மக்களையும், அங்கு நடக்கும் பஞ்சாயத்துக்களும் தெரியாது என்று விமர்சித்துள்ளார்.

எனக்கு பஞ்சாயத்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் கட்டப்பஞ்சாயத்துக்கு நான் வரமாட்டேன். தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன, வைகை அணை தூர்வாறும் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளது.

அது மட்டுமில்லாமல் தேனி மாவட்டத்தை சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது, இது போன்ற காரியங்களில் தான் என்னை ஈடுபடுத்திக் கொள்வேனே தவிர மற்ற எந்த வித பஞ்சாயத்திலும் ஈடுபடமாட்டேன்.

தேனி தொகுதி மக்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை விட மிகச்சிறப்பாக செய்வேன். நியூட்ரினோ திட்டமாக இருந்தாலும் சரி, வேறு பல மத்திய அரசு திட்டங்கள் ஆக இருந்தாலும் சரி மக்களுக்கு பாதிப்பாக இருக்கும், விவசாய நிலங்கள் பாதிப்படையும் திட்டமாக இருந்தால் அவற்றை தடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். #evkselangovan #congress #parliamentelection

Tags:    

Similar News