உள்ளூர் செய்திகள்

குன்னூர் அருகே காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம்

Published On 2023-10-31 08:35 GMT   |   Update On 2023-10-31 08:35 GMT
  • தேயிலை தோட்டத்துக்கு சென்றபோது சம்பவம்
  • ஊட்டி மருத்துவ கல்லூரியில் திவிர சிகிச்சை

அருவங்காடு,

குன்னூர் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் காட்டு யானை, காட்டு எருமை, சிறுத்தை, கரடி மற்றும் காட்டு பன்றிகளும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதுடன் அச்சத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில் காட்டுப்பன்றி பகல் மட்டும் அல்லாமல் இரவு நேரத்திலும் குடியிருப்பு பகுதிகளை சுற்றி வந்து அங்குள்ள கழிவுகளை ருசி பார்த்து செல்கிறது.

நேற்று இப்பகுதி சேர்ந்த ரமணி (வயது 40) என்ற பெண் இயற்ைக உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றார்.

அப்போது தேயிலைச் செடிகளுக்கு இடையே மறைந்திருந்த காட்டுப்பன்றி திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கி உள்ளது. இதில் அவர் கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து காட்டுப்பன்றியை விரட்டி விட்டு உடனடியாக அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வனவிலங்குகளின் நடமாட்டத்தின் காரணமாக கிராமவாசிகள் தொடர்ந்து அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே வனத்துறையினர் இதனை கண்காணித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News