உள்ளூர் செய்திகள்

குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள நடைமேடை பயன்பாட்டிற்கு வருமா?

Published On 2023-07-19 14:26 IST   |   Update On 2023-07-19 14:26:00 IST
  • நடைமேடை பயன்பாட்டுக்கு வராத காரணத்தால், ஒரு சில சமூக விரோத செயல்களும் அப்பகுதியில் நடைபெற்றது.
  • நடைமேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்து.

குனியமுத்தூர்,

கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு நடைமேடை ஒன்று நிறுவப்பட்டது.

ஆனால் நீண்ட ஆண்டுகளாக அது பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. மேலும் பயன்பாட்டுக்கு வராத காரணத்தால், ஒரு சில சமூக விரோத செயல்களும் அப்பகுதியில் நடைபெற்றது.

எனவே பயன்பாட்டிற்கு இல்லாத இந்த நடைமேடையை மாற்றி அமைத்து குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாநகராட்சி அங்கிருந்த நடைமேடையை அகற்றி குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக நிறுத்தினர்.

பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக நடைமேடையை அரசு பள்ளி முன்பாக நிறுவப்பட்டது.

ஆனால் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக நிறுவப்பட்ட நடைமேடை இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. அந்த நடை மேடையில் ஏறி யாருமே சாலையை கடந்து வலது புறம் இருந்து இடது புறம் சென்றதாக தெரியவில்லை.

பள்ளி மாணவ, மாணவிகளும் வழக்கம் போல சாலையின் குறுக்கே நடந்து தான் பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் நடைமேடை அப்பகுதியில் அமைத்தும் பயன் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் வழக்கம் போல் தான் உள்ளது.

இது குறித்து பகுதி மக்கள் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி சார்பாக இந்த நடைமேடைக்கு ஒரு திறப்பு விழா ஏற்பாடு செய்து, அதில் பொதுமக்களை நடக்க வைத்தால், அச்சூழ்நிலை சராசரியான வாழ்க்கையாக மாறிவிடும். அல்லது காலை மற்றும் மாலை சமயங்களில் பள்ளி முடிந்து வெளியே வரும் பள்ளி குழந்தைகளை நடை மேடையில் ஏறி, சாலையை கடந்து செல்வதற்கு அறிவுறுத்தலாம்.

இதை எதுவுமே இல்லாமல் செயல்படும் காரணத்தால் நடைமேடை வெறுமனே நின்று கொண்டிருக்கும் காட்சியை காண முடிகிறது. இன்னும் சொல்ல போனால் பழைய சூழ்நிலை போல் சமூக விரோத செயல்கள் இங்கு நடந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கோவை மாநகராட்சி விரைந்து செயல்பட்டு இந்த நடைமேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களாகிய எங்களது கருத்து ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News