உள்ளூர் செய்திகள்

ஏத்தாப்பூரில் வெறிச்சோடி கிடக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். ஆங்கிலேயர் ஆட்சியில் ஏத்தாப்பூர் அரசு மருந்தகம் திறக்கப்பட்ட கல்வெட்டு. காமராஜர் திறந்து வைத்த பிரசவ விடுதியிலுள்ள கல்வெட்டு.

ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா?

Published On 2022-10-28 06:56 GMT   |   Update On 2022-10-28 06:56 GMT
  • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது.
  • இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கும் கிராம மக்கள்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ., துாரத்தில், புத்திர கவுண்டன்பாளையம் கல்வராயன்மலை கருமந்துறை சாலையில் அமைந்துள்ளது.

அக்ரஹாரம், அபிநவம், கணேசாபுரம், வடக்குக்காடு, காரைக்களம், கல்லேரிப்பட்டி, படையாச்சூர், கல்யாணகிரி, எம்.சி.ராஜா நகர், புத்திரகவுண்டன்பாளையம், வைத்தியகவுண்டன்புதுார் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு ஏத்தாப்பூர் முக்கிய மையமாக விளங்கிறது.

இப்பகுதிமக்களின் நலன்கருதி, பழமையான ஏத்தாப்பூர் சாம்பவ மூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரே வசிஷ்டநதி கரை யோரத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது. மாவட்ட கமிட்டித் தலைவரான அப்போதைய எம்.எல்.சி ராவ்பகதுார் எல்லப் பச் செட்டியார் இந்த மருந்தகத்தை திறந்து வைத்துள்ளார். 1958 அக்டோபர் 7-ந் தேதி, அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர், பிரசவ விடுதி கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

இதனையடுத்து இந்த அரசு மருந்தகம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அறுவை சிகிச்சை அரங்கு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், பிரேத பரிசோதனை க்கூடம் உள்ளிட்ட வசதிகளும், 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வந்தது. இதற்குபிறகு பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கவனமின்மையால், இந்த அரசு மருத்துவமனை, 25 ஆண்டுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது.

தற்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால், சிகிச்சை பெறுவதற்கு வழியும் வசதிகளும் இல்லை.

இதனால், ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட, ஆத்துார், சேலம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதுமட்டுமின்றி பழைய கட்டடங்கள் வழுவிழந்து காணப்படுகிறது.

எனவே, 93 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட் ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நுாற்றாண்டு விழா காண்பதற்குள், விசாலமான புதிய கட்டடம் அமைத்து, நவீன அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் படுக்கைப்பிரிவு, ஸ்கேனிங், எக்ஸ்ரே,ஆய்வகம் மற்றும் மருத்துவர், பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமித்து, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்தவும், சேலம் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News