வால்பாறை அருகே ஊருக்குள் புகுந்து வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்
- ரங்குமுடி எஸ்டேட் பாரதிதாசன் நகரில் நேற்றிரவு புகுந்து அட்டகாசம்
- வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வருகின்றன.
அவ்வாறு வரும் யானைகள், வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் பாரதிதாசன் நகர் பகுதியில் நேற்றிரவு 11 காட்டு யானைகள் புகுந்தன.
அந்த யானைகள் குடியிருப்பு பகுதியிலேயே சில மணி நேரங்கள் சுற்றி திரிந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ராஜன் என்பவருடைய வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து தூக்கி எறிந்து சென்றது. வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறும்போது, இந்த பகுதிகளில் அண்மைக் காலங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வனத்துறையினர் இங்கு கண்காணிப்பு பணி மேற்கொண்டு காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.