உள்ளூர் செய்திகள்

கூடலூரில் காட்டு யானைகள் அட்டகாசம்

Published On 2022-09-01 10:20 GMT   |   Update On 2022-09-01 10:20 GMT
  • கிராம அஞ்சலகத்தை 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடின.
  • பள்ளியில் உள்ள சத்துணவு அறையை சேதப்படுத்தி, அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றன.

ஊட்டி,

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்களை தாக்கி வருகிறது. தொடர்ந்து வீடுகளையும் சேதப்படுத்தி வந்தன.

தற்போது பேரூராட்சி அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளி, நூலகம், கிராம அஞ்சலகத்தை 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடின.

இதில் பேரூராட்சி அலுவலக பொருட்கள், பள்ளி வகுப்பறைகள், நூலகத்தில் இருந்த கணினி மற்றும் தளவாடப் பொருட்கள், அஞ்சலகத்தில் இருந்த பதிவேடுகள் நாசமானது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை சூறையாடின.

தொடர்ந்து பள்ளியில் உள்ள சத்துணவு அறையை சேதப்படுத்தின. பின்னர் அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றன.

மேலும் அங்குள்ள நூலகத்தை சேதப்படுத்தின. 3-வது முறை இதேபோல் அனைத்து கட்டிடங்களிலும் இருந்த கதவுகளை காட்டு யானைகள் வளைத்து பயன்படுத்த முடியாத வகையில் சேதப்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்த ஓவேலி பேரூராட்சி மற்றும் வருவாய், வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை தின்று பழகி விட்டதால் காட்டு யானைகள் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்து 3-வது முறையாக அட்டகாசத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே, பேரூராட்சி அலுவலக பகுதியில் இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இனிவரும் நாட்களில் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.

Tags:    

Similar News