மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்? பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேட்டி
- கடந்த மாதம் டெல்லி சென்று தென்னை விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரை சந்தித்து இருந்தோம்.
- சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கோரிக்கைக்காகவே வந்தோம்.
கோவை,
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்? என்பது குறித்து பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த மாதம் டெல்லி சென்று தென்னை விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரை சந்தித்து இருந்தோம். அந்த மனுவை மீண்டும் வலியுறுத்து வதற்காகவே வந்தோம். மனு கொடுத்து நிதி அமைச்சரை சந்தித்தோம். வேறு எந்த அரசியல் காரணங்களும் கிடையாது.
மாநில அரசிடம் பலமுறை கடிதம் மூலம் வலியுறுத்தியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மத்திய அரசிடம் வலியுறுத்தியும் வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இங்கு வந்தோம். கூட்டணி குறித்த எல்லாம் பேசவில்லை. தென்னை விவசாயிகள் கோரிக்கை மட்டுமே பேசினோம். கூட்டணி குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார். நாங்கள் அது தொடர்பாக வரவில்லை. அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நாங்கள் செயல்படுவோம்.
விவசாயிகள் பிரச்சினைக்காகவே வந்தோம். இது அரசியல் ரீதியான சந்திப்பை கிடையாது. கூட்டணிக்கும் இந்த சந்திப்புக்கும் சம்பந்தமில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கோரிக்கைக்காகவே வந்தோம். அரசியல் காரண காரியங்கள் எதுவுமே கிடையாது.
எங்களுக்கு ஒரே அம்மா புரட்சித்தலைவி தான். மத்திய நிதி அமைச்சரை மரியாதை நிமித்தமாக அம்மா என்றோம். அம்மா வை (ஜெயலலிதாவை) யாரோடும் ஒப்பிட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.