ஊர்வலம்-மறியலால் திண்டாடும் பொதுமக்கள்
- ராஜபாளையத்தில் குண்டும்குழியுமான சாலையில் ஊர்வலம்-மறியல் நடத்துவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
- இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழிற்சாலைகள் மிகுந்த நகரம், 2 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகராட்சி. தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட தென்பகுதிவாழ் பொதுமக்களுக்கு முக்கிய வழித்தடமாக ராஜபாளையம் இருந்து வருகிறது.
நாளும் பல நூறு கனரக வாகனம், பேருந்து, மகிழ்ந்து, இருசக்கர வாகனங்களும் வந்துசெல்கின்றன. ராஜபாளையத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளான பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக்குடிநீர், சத்திரப்பட்டி ெரயில்வே மேம்பாலப் பணிகள் ஒருசேர நடக்கிறது.
ெரயில்வே மேம்பாலப்பணியால் டி.பி.மில்ஸ் சாலை முடக்கப்பட்டுள்ளது. இதனால் காட்டன் மார்க்கெட் பழையபேருந்து நிலையம், காந்தி சிலை வழியாக ஒரு வழிப்பாதை மட்டுமே இருக்கிறது.
திட்டப்பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக கிடக்கிறது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி பயணிக்க லாயக்கற்ற சாலையாக மாறுகிறது. வெயில் காலங்களில் தூசி பறக்கிறது.
முன்னே செல்லும் வாகனத்தை காண இயலாத அளவிற்கு தூசி பறப்பதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அரசியல் கட்சியினர் நடத்தும் சாலை மறியல், ஊர்வலம் அனைத்திற்கும் இந்த ஒருவழிச் சாலையையே தேர்தெடுக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் சொல்லொனத்துயரத்தை அடைகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக பெரும் துயரத்தை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண அதிகாரிகள் கண்காணிப்பதோடு, திட்டப்பணிகளை போர்கால அடிப்படையில் திட்டமிட்டு விரைந்து முடிக்க முன்வேண்டும்.
அப்போதுதான் நிரந்தர தீர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.