உள்ளூர் செய்திகள்

மாலைநேர உழவர் சந்தை

Published On 2022-08-07 08:47 GMT   |   Update On 2022-08-07 08:47 GMT
  • ராஜபாளையத்தில் மாலைநேர உழவர் சந்தை நடத்தப்படுகிறது.
  • மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்காக விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க 1999-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உழவர் சந்தை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும் நுகர்வோருக்கு தரமான, பசுமை காய்கறிகள் மற்றும் பழங்களை நியாயமான விலையில் வழங்குவது ஆகும்.

2022-23-ம் ஆண்டு–க்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் மாலை நேர உழவர் சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் அழுகக்கூடிய பொருட்கள் தவிர பிற வேளாண் பொருட்களான தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர்.

இத்தகைய விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரிடையாக சந்தைகளில் விற்பனை செய்யும்பொழுது விவசாயிகளுக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் வருவாய் அதிகரிப்பதோடு நுகர்வோர்களுக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை நேரங்களில் செயல்படும் உழவர் சந்தைகள் தற்போது விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை வீதம் மாலை நேர உழவர் சந்தை செயல்பட உள்ளது.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் நுகர்வோர் வருகை அதிகமுள்ள ராஜபாளையம் உழவர்சந்தையில் மாலை நேர சந்தை தொடங்கப்பட உள்ளது. மாலை நேர உழவர் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதில் விவசாயிகள் விளைவிக்கும் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வெல்லம், காளான், நாட்டு முட்டை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மாலை நேர சந்தைகளில் பங்கேற்க விரும்பும் தகுதியான விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அடையாள அட்டைகள் பெற வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), விருதுநகர் அலுவலகம் (04562- 242601) அல்லது சந்தை நிர்வாக அலுவலர் , ராஜபாளையம் உழவர் சந்தை (8610067536) தொடர்பு கொள்ளலாம்.

பொது மக்கள் தரமான அரிசி, பருப்பு மற்றும் இதர உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மாலை நேர உழவர் சந்தையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News