மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
- மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
- கட்டனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள கட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகணேசன் (வயது 33) கட்டிட தொழிலாளி.இவருக்கு திருமணமாகி கஸ்வின் (5) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று அருகில் உள்ள பொட்டல்பச்சேரி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது.
இதனை கண்டு களிப்பதற்காக முத்துகணேசன் தனது 5 வயது மகனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். திருவிழாவை பார்த்து விட்டு இருவரும் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது கட்டனூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முத்துகணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கட்டனூரை சேர்ந்த அஜித்குமார், முத்துகணேசன், கஸ்வின் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.
தந்தை-மகன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக கட்டனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.