உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் 12 திருட்டு-கொள்ளை முயற்சி

Published On 2022-11-11 07:44 GMT   |   Update On 2022-11-11 07:44 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 திருட்டு-கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகிறது.
  • இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை,நகை பறிப்பு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, ரேசன் அரிசி கடத்தல், இளம்பெண்கள் மாயம் போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 9-ந் தேதி மட்டும் 12 இடங்களில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. அன்றைய தினம் விருதுநகர் பைபாஸ் ரோட்டில் உள்ள விறகு கடையில் மர்ம நபர் புகுந்து ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றார்.

இதேபோல் பாத்திமா நகர் மெயின் ரோட்டில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு நகை, பணம் இல்லாததால் பொருட்களை சூறையாடிவிட்டு அருகில் உள்ள ஜவுளிக்கடைக்குள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் தொடர் கொள்ளைகளால் அந்தப்பகுதி மக்கள் பீதிய டைந்துள்ளனர்.

எனவே போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், திருட்டு பயம் காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்வது அச்ச மாக உள்ளது. தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் நபர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை விற்பனையும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News