உள்ளூர் செய்திகள்

காட்டுயானை ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்த முயற்சி

Published On 2022-08-05 08:44 GMT   |   Update On 2022-08-05 08:44 GMT
  • 4-ம் மைல் பகுதியில் முக்கிய சாலை வழியாக தினமும் காட்டுயானை காலை மற்றும் இரவில் ஊருக்குள் வருகிறது.
  • யானை ஊருக்குள் தினமும் வருவதாக கூறி வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி:

கூடலூர் அருகே கல்லிங்கரை, 4-ம் மைல் பகுதியில் முக்கிய சாலை வழியாக தினமும் காட்டுயானை காலை மற்றும் இரவில் ஊருக்குள் வருகிறது.

நேற்று காலை 7 மணிக்கு கல்லிங்கரை-4-ம் மைல் சாலையில் காட்டு யானை வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது.

இதை அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது காட்டு யானை ஊருக்குள் தினமும் வருவதாக கூறி வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இதனிடையே சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் அறிவித்தனர். பேச்சுவார்த்தை இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார், கூடலூர் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காட்டுயானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அது சாத்தியம் இல்லாதது, கிராம மக்களின் கோரிக்கையின்படி காட்டுயானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்தனர்.

அதற்கு காட்டுயானை ஊருக்குள் வரும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும், மேலும் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொண்டதால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக கிராம மக்கள் அறிவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே காட்டுயானை வருகையை தடுக்க வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News