உள்ளூர் செய்திகள்

வலுவான கூட்டணிக்கு வியூகம் வகுக்கும் விஜய்

Published On 2024-10-28 14:22 IST   |   Update On 2024-10-28 14:22:00 IST
  • அ.தி.மு.க.வை போலவே காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் விஜய்க்கு ஆதரவான மனநிலையுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
  • விஜய்யின் ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி முதல் கட்சியாக வரவேற்று பாராட்டு தெரிவித்து உள்ளது.

சென்னை:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாட்டை எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியுடன் நடிகர் விஜய் நடத்தி முடித்து இருக்கிறார்.

மாநாட்டில் அவரது பேச்சை கேட்க 6 லட்சம் முதல் 8 லட்சம் தொண்டர்கள் வரை திரண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டதாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சியின் கொள்கைகளையும், எதிர்கால திட்டங்களையும் தனக்கே உரிய பாணியில் பேசி வெளியிட்டார். குறிப்பாக 5 தலைவர்களை வழிகாட்டி யாக ஏற்றுக்கொண்டு பிரிவினை வாதம், ஊழல் ஆகிய இரண்டையும் எதிரிகளாக அவர் குறிப்பிட்டதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

பல்வேறு விசயங்கள் குறித்து மாநாட்டில் விஜய் பேசினாலும், "தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும்" என்று அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு தமிழக அரசியலை குலுங்க செய்துள்ளது. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கும், புதிய கூட்டணி உருவாவ தற்கும் விஜய்யின் பேச்சு அடித்தளம் அமைத்து இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

விஜய் பேச்சை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு அவர் 2026-ம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறும் அளவுக்கு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டாலும் வலுவான ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதை புரிந்துக் கொண்டனர். வலுவான கூட்டணிக்கான அச்சாரத்தையும் அவர் தனது பேச்சின் போதே சுட்டிக்காட்டி இருப்பதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள்.

விஜய் தனது பேச்சில் தி.மு.க., பா.ஜ.க. இரண்டு கட்சிகளையும் நேரடியாக தாக்கி பேசியுள்ளார். இதன் மூலம் இந்த 2 கட்சிகளுடனும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்காது என்பது உறுதியாகி இருக்கிறது. அது மட்டுமின்றி இந்த 2 கட்சிகள் மீது அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிரடி தாக்கு தலை விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் எம்.ஜி.ஆரை விஜய் புகழ்ந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர் அ.தி.மு.க.வுடன் சற்று சமரசமான மனநிலையுடன் செல்வதாக உணருகிறார்கள். தேவை ஏற்படும் பட்சத்தில் அ.தி.மு.க.வுடன் கைகோர்க்கவும் வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் இதுகுறித்து பேசும்போது அவர்கள் இதை மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை. விஜய்யின் அடுத்த நடவடிக்கைகளை பொறுத்து அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் அமையும் என்று தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வை போலவே காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் விஜய்க்கு ஆதரவான மனநிலையுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் இப்போது இது பற்றி பேசாமல் பொறுமையாக காத்திருக்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே விஜய் பேச்சு காரணமாக தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் யோசனை செய்ய தொடங்கி இருப்பதாக தெரிய வந்து உள்ளது. இதுவரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வரும் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறியது கிடையாது.

இதற்கு முன்பு தி.மு.க. விடமும், அ.தி.மு.க.விடமும் பல கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டு கோரிக்கை விடுத்தன. ஆனால் அவை அனைத்தையும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் நிராகரித்தன. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஆட்சியில் பங்கு தருகிறேன் என்று மிகப்பெரிய வெடி குண்டை வீசியபடி விஜய் அரசியல் களத்துக்கு வந்துள்ளார்.

இதுதான் பல கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது. விஜய்யுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில் நிர்வாகத்தில் பங்கு பெற்று அமர முடியும் என்று அந்த கட்சிகளுக்கு விருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விஜய்யின் ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி முதல் கட்சியாக வரவேற்று பாராட்டு தெரிவித்து உள்ளது. அதுபோல புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் வரவேற்றுள்ளார். இதே மனநிலையில் மேலும் 3 முக்கிய கட்சிகள் உள்ளன.

வரும் மாதங்களில் மேலும் சில முக்கிய கட்சிகள் விஜய்யின் அறிவிப்பை பரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். அத்தகைய சூழ்நிலைகள் உருவானால் விஜய் தெரிவித்துள்ளபடி தமிழகத்தில் வலுவான ஒரு கூட்டணி உருவாக வாய்ப்பு இருக்கிறது.

இதன் மூலம் விஜய் வகுத்துள்ள வியூகம் வெற்றி பெறும் என்று தமிழக வெற்றிக் கழக மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். விஜய் அழைப்பை எந்தெந்த கட்சிகள் எப்போது ஏற்று தங்களது நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News