விபத்தில் சிக்கிய கார் முன்பக்கம் சேதம் அடைந்துள்ள காட்சி.
கார் டயர் வெடித்து தடுப்பில் மோதி விபத்து
- குழந்தை உட்பட 5 பேர் உயிர்தப்பினர்
- போக்குவரத்து பாதிப்பு
வேலூர்:
சென்னையை சேர்ந்த 5 பேர் இன்று காலை பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர்.
கார் வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது.அப்போது காரின் வலது புறம் உள்ள முன் பக்க டயர் திடீரென வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. சாலையில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி மீண்டும் சாலையில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் முன் பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது.காரில் இருந்த குழந்தை உட்பட 5 பேரும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
அந்த வழியாக சென்றவர்கள் உடனே காரில் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
விபத்தில் சிக்கியவர்கள் யார்? என தெரியவில்லை. சென்னை பதிவெண் கொண்ட கார் என்பதால் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.