- ஒரு தலை காதலால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அருகே ஒருதலை காதலால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.
வேலூர் அடுத்த பாகாயம் அருகே உள்ள மேட்டு இடையம்பட்டி கிராமம், கணவாய்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மணிகண்டன்(வயது 26), கட்டிட மேஸ்திரி. இவர் அதே பகுதியில் உள்ள உறவினர் பெண்ணை ஒரு தலையாக கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
மேலும் அந்தப் பெண்ணிடம் தனது காதலை கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் தன் பெற்றோர் பார்த்து சொல்பவரே திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியுள்ளார். இதனால் மணிகண்டன் தனது பெற்றோரை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு தங்கள் மகளை தரமாட்டோம் என பெண்ணின் பெற்றோர் கூறியதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.