உள்ளூர் செய்திகள்

சொக்கவாசல் வழியே எழுந்தருளிய தாடாளன் பெருமாள்.

வைகுண்ட ஏகாதசி; ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சொர்க்கவாசலில் எழுந்தருளிய தாடாளன் பெருமாள்

Published On 2023-01-02 13:48 IST   |   Update On 2023-01-02 13:48:00 IST
  • சொர்க்கவாசலுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
  • ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியை இன்று மட்டுமே வணங்க முடியும்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28-வது ஸ்தலமான ஸ்ரீ திருவிக்கிரம நாராயணபெருமாள் எனும் தாடாளன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள திருமங்கை யாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் மேள, தாளங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாடாளன்பெருமாள் சொர்க்கவாசல் அருகே எழுந்தருளினார். அங்கு சொர்க்கவாசலுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அவ்வழியே ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியை இன்று மட்டுமே வணங்க முடியும் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் கட்டுபாடுகளுடன் பக்தர்கள் இன்றி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்ற நிலையில் இன்று கட்டுபாடுகள் ஏதும் இல்லாததால் அதிக அளவு பக்தர்கள் வந்து வழிபாடு செய்து பெருமாளை சேவித்தனர்.

Tags:    

Similar News