உருமாண்டம்பாளையம் அம்மன் கோவில் திருவிளக்கு பூஜை
- திருவிளக்கு பூஜையில் 108 திருவிளக்கு மந்திரங்கள் முழங்கப்பட்டன
- பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கும் மஞ்சள் கயிறு, பூக்கள் வழங்கப்பட்டன.
கவுண்டம்பாளையம்,
கோவை உருமாண்டம்பாளையம் பகுதியில் இந்துமுன்னணி சார்பில் 31-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
2வது நாளாக இன்று உருமாண்டம்பாளையம் மாகாளியம்மன் கோயில் திடலில் திருவிளக்கு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. இதனை வேள்வி ஆசிரியர் மனோஜ்குமார் நடத்தி வைத்தார். இதில் அந்த பகுதியை சேர்ந்த 251 பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். இதற்காக அவர்கள் ஒரே வண்ண ஆடையில் வந்திருந்தனர்.
அப்போது பெண்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பழம், உள்ளிட்டவற்றை அம்மன் முன்பு வைத்து திருவிளக்கேற்றி மக்கள் நலன் வேண்டியும், குடும்பம் செழிக்கவும், மழை வேண்டியும் வழிபாடு செய்தனர்.
திருவிளக்கு பூஜையில் 108 திருவிளக்கு மந்திரங்கள் முழங்கப்பட்டன. பெண்கள் குத்துவிளக்குகளை அலங்கரித்து தீபம் ஏற்றியும், மஞ்சள் பொடியால் விநாயகர் செய்தும் பூஜைகள் நடத்தினர்.