வீடு, வீட்டு மனைகள் கணக்கெடுப்பால் பொதுமக்கள் அச்சம்
- வீடு, வீட்டு மனைகள் கணக்கெடுப்பால் ஸ்ரீரங்கம் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
- நூற்றுக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள 329 ஏக்கர் நிலத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அடிமனை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி, வெள்ளித் திருமுத்தம் கிராமத்துக்குட்பட்ட உத்தரவீதி, சித்திரை வீதி, அடையவளஞ்சான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 329 ஏக்கரில் பத்திரப்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால், பொதுமக்கள் அவசரத்திற்கு நிலத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியவில்லை.இது தொடர்பான வழக்கில், கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்த ஐகோர்ட் மதுரை கிளை, இந்த நிலம் கோவிலுக்கு பாத்தியப்பட்டது என தீர்ப்பளித்தது. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் நகர் நல சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அம்மனு விசாரணைக்கு வர உள்ளது.இதனிடையே கடந்த ஜூன் மாதம், இந்த அடிமனை விவகாரத்துக்குட்பட்ட டிடி 1027-ல் கட்டப்பட்ட 329,91 ஏக்கர் இடத்திலும், பிளாக் வார்டு, டவுன் சர்வே எண்களில் உள்ள இடங்களில் தனிநபர்கள் பெயரில் மின் இணைப்பு ஏதும் வழங்கக்கூடாது என்றும், தனி நபர்கள் பெயரில் மின் இணைப்பு இருந்தால் அதனை கோவில் பெயருக்கு மாற்றம் செய்யவும் மின்வாரியத்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.இப்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சார்பில் சில நாட்களாக வீடு வீடாகச் சென்று வீட்டின் உரிமையாளர்கள் விவரம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் கேட்ட போது கோவில் நிர்வாகத்தின் உத்தரவின்படி கோவில் நிலத்தில் யார் யார் வசித்து வருகின்றனர் என்று பட்டியலிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.இதனிடையே, ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை உரிமை மீட்புக்குழு சார்பில், போலீசில் புகார் அளிப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.