சட்டக் கல்லூரி மாணவனின் தாயாரிடம் ரூ.9 லட்சம் நூதன மோசடி
- வெளிநாட்டு கார் பரிசு விழுந்ததாக கூறி ரூ.9 லட்சம் நூதன மோசடி நடைபெற்று உள்ளது
- மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் இர்பான். சட்ட கல்லூரி மாணவர். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் தனது தாயாரின் செல்போனுக்கு கடந்த ஜூன் 6-ம் தேதி ஒரு அழைப்பு வந்தது.எதிர் முனையில் பேசியவர் நேபாள நாட்டிலிருந்து பேசுகிறேன். நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி. உங்களது செல்போன் நம்பருக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கார் பரிசாக விழுந்துள்ளது.அந்த காரினை பெறுவதற்கு சிறிது தொகை ஜி.எஸ்.டி.யாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய அந்தபெண்மணி யாரிடமும் கலந்தாலோசிக்காமல் உடனடியாக அந்த நபர் கொடுத்த வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் ரிசர்வ் வங்கி அனுமதி, சர்வீஸ் டாக்ஸ் என பல காரணங்களை சொல்லி அந்த நபர் பணத்தைக் கறந்தார். கேட்க,கேட்க பணம் அனுப்பியதால் உஷாரான மோசடி பேர்வழி மீண்டும் உங்களுக்கு ரூ. 8 லட்சம் பரிசு தொகை விழுந்துள்ளது என கூறி மொத்தம் பல்வேறு தவணைகளாக ரூ. 9 லட்சத்து 9 ஆயிரத்து 900 பணத்தை பெற்றார்.பின்னர் ஓரிரு தினங்களில் பரிசுத்தொகை உங்களது வங்கி கணக்குக்கு வந்து சேரும் என கூறியுள்ளார். ஆனால் பல நாட்கள் காத்திருந்த போதும் பரிசு தொகையும் வரவில்லை. காரும் கைக்கு வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட அந்தப் பெண்மணி தனது மகனிடம் கூறியுள்ளார். இதை எடுத்து ஷேக் இர்பான் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிந்து நதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்