உள்ளூர் செய்திகள்

கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

Published On 2023-11-02 14:11 IST   |   Update On 2023-11-02 14:11:00 IST
  • திருச்சியில் கல்லறை திருநாளை முன்னிட்டு கல்லறைகளில் மலர் தூவி, படையலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
  • அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது

திருச்சி,

இறந்தவர்களை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கின்றனர்.

கல்லறை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை மேலப்புதூர் ஆரோக்கிய அன்னை பேராலயம், பாலக்கரை சகாயமாதா தேவாலயம், எடத்தெரு பழைய கோவில், மெயின்கார்டுகேட் லூர்து அன்னை ஆலயம், புத்தூர் பாத்திமா மாதா சர்ச், பொன்மலை ஜோசப் ஆலயம், கிராப்பட்டி புனித தெரசா ஆலயம், காட்டூர் அந்தோணியார் கோவில், குழந்தை யேசு கோவில், ஸ்ரீரங்கம் அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ கோவில்களில் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் முன்னோர்களின் ஆன்ம நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

திருப்பலியில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் அதற்கு பின்னர், மேலப்புதூர் உத்திரிக்க மாதா, மார்சிங்பேட்டை ஆங்கிலோ இந்தியன், கோர்ட் ரவுண்டானா அருகில் மற்றும் அரிஸ்டோ ரவுண்டான அருகில் உள்ள சி.எஸ்.ஐ., காட்டூர், மணல்வாரித்துறை, ஆண்டாள் வீதி, ஜி கார்னர், ெபான்மலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்றனர்.

அங்கு கல்லறைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து, பூக்களை தூவி, இறந்தவர்களுக்கு பிடித்த உணவு பொருட்களை படையல் வைத்தனர். பின்னர் மெழுகுதிரி ஏந்தி, உடலால் எங்களை விட்டுப் பிரிந்தாலும் உள்ளத்தில் எப்போதும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைவு கூர்ந்து, முன்னோர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் முன்னோர்கள் நினைவாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு, ஆடைகள் உள்ளிட்ட அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை செய்தனர்.

கல்லறை திருநாள் நடைபெறுவதை முன்னிட்டு மேலப்புதூர், மார்சிங்பேட்டை, கோர்ட் ரவுண்டானா, அரிஸ்டோ ரவுண்டானா, ஜி கார்னர் உள்ளிட்ட கல்லறை தோட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News