உப்பிலியபுரம் அருகே வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்
- நெல்மூட்டைகளுக்கான வரவுத் தொகையில் இருந்து பணத்தை எடுப்பதற்காக வந்தனர்.
- சமூக ஆர்வலர்கள் பொதுமக்களிடையே வங்கியின் செயல்பாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூரில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு விவசாயிகள் தங்களது சம்பா உழவு நடவுப்பணிகளுக்காக தங்களது கணக்கிலுள்ள அரசு நெல்கொள்முதல் மையங்களில் போடப்பட்ட நெல்மூட்டைகளுக்கான வரவுத் தொகையில் இருந்து பணத்தை எடுப்பதற்காக வந்தனர்.
அப்பொழுது வங்கியில் பணம் இல்லை என்றும் மறுநாள் வந்து பணம் எடுத்துக்கொள்ளுமாறும் வங்கி ஊழியர்களால் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று வங்கிக்கு விவசாயிகள் சென்றனர். அப்போது வங்கி மேலாளர் வரவில்லை என்றும், வந்த பின் எடுத்துக்கொள்ளுமாறும் ஊழியர்கள் கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசின் விதவை உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை ஆகியவை நிலுவையில் உள்ள கடன்களை கட்டினால் தான் தரப்படும் என வங்கியில் கூறப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
பேரூராட்சியின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்ட சிறு குறு தொழில் முனைவோர்களுக்கான கடன் தொகையும் நிலுவையில் உள்ள கடனுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மாதாந்திர செலுத்துத் தொகை மட்டும் வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் பொதுமக்களிடையே வங்கியின் செயல்பாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கியில் வடமாநில ஊழியர்களின் ஆதிக்கத்தால் கிராமப்புற பொதுமக்கள் விவசாயிகள் மொழி பிரச்சனையுடன், வங்கி செயல்பாடுகளில் காலதாமதம், பொறுப்பற்ற பேச்சுகள், சேவை குறைபாடுகள் உள்ளன. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் 10 கிமீ தொலைவிலுள்ள சோபனபுரத்திலுள்ள தனியார் வங்கியில் கணக்கை துவக்கி வரவு செலவு வைத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.