உள்ளூர் செய்திகள்

மின்வேலியில் சிக்கி பழங்குடியின வாலிபர் பலி-தோட்ட உரிமையாளர் மீது வழக்கு

Published On 2023-04-28 10:00 GMT   |   Update On 2023-04-28 10:00 GMT
  • குப்புசாமி தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
  • தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் மோட்டர் சைக்கிளுடன் வாலிபர் விழுந்தார்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சி மேல்பாவியைச் சேர்ந்தவர் குப்புசாமி (50). விவசாயி.

இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தோட்டத்தில் தென்னங் கள்ளும் விற்று வந்துள்ளார். இது வனப்பகுதியையொட்டி உள்ளதால் தோட்டத்தை சுற்றிலும் மின்வேலியும் அமைத்திருந்தார்.

நேற்று மாலை இவரது தோட்டத்திற்கு கள் குடிப்பதற்காக காளியூரை சேர்ந்த பழங்குடியின வாலிபரான ஜெயக்குமார் (34) தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

சிறிது நேரத்தில், அவருடன் வந்தவர்கள் கள் குடித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் ஜெயக்குமாருக்கு அதிக போதை ஏற்பட்டதால் அங்கேயே படுத்து விட்டார்.

இந்த நிலையில் இரவு 7 மணியளவில் ஜெயக்குமார் எழுந்து, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மின்வேலியில் மோட்டார் சைக்கிளோடு விழுந்தார்.

அப்போது யானைகள் வராமல் இருப்பதற்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் மின் இணைப்பு இருந்தது தெரியாததால், அதில் விழுந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காரமடை போலீசார் தோட்ட உரிமையாளரான குப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி ஒருவர் பலியான தகவல் அறிந்ததும் குப்புசாமி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

Tags:    

Similar News