சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்த அறநிலையத்துறை அதிகாரிகள்- தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு
- திட்டமிட்டப்படி இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்துறை அலுவலர் சுகுமார் தலைமையில் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்தனர்.
- கோவில் ஆவணங்களை பொது தீட்சிதர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்தனர்.
சிதம்பரம்:
உலக பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்தனர். பின்னர் அரசு உத்தரவின் பேரில் அந்த தடை நீக்கப்பட்டு பக்தர்கள் தற்போது கனகசபை மீது ஏறி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த கோவிலை சட்ட விதிகளின்படி தீட்சிதர்கள் நிர்வாகம் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கடலூர் துணை ஆணையர் ஜோதி என்பவரை நியமித்தது. இவரது தலைமையிலான குழு நடராஜர் கோவிலில் இன்று (7-ந் தேதி), நாளை (8-ந் தேதி) 2 நாட்கள் நேரடியாக ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பொது தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஆய்வுக்கு பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று ஆய்வுக்கு வந்த அமைச்சர் சேகர் பாபு கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடாது என்று அறிவித்திருந்தார்.
என்றாலும் திட்டமிட்டப்படி இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்துறை அலுவலர் சுகுமார் தலைமையில் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்தனர்.
அதாவது 2014-ம் ஆண்டு முதல் வரவு- செலவு கணக்குகள், திருப்பணி குறித்த விபரங்கள், அவற்றுக்கான தொல்லியல் கருத்துறு, இந்து சமய அறநிலைத்துறை அனுமதி விபரம், மதிப்பீடு விபரங்கள், கோவிலுக்கு சொந்தமான கட்டளைகள், அவற்றுக்கு சொந்தமான சொத்து, அவற்றில் இருந்து பெறப்படும் வருவாய் இனங்கள், சொத்துக்களின் தற்போதைய நிலை, இந்துசமய அறநிலையத்துறை சட்டவிதிகளின் படி அங்கீகரிக்கப்பட்ட சொத்து பதிவேடு உள்ளிட்டவற்றை அறநிலையத்துறை அதிகாரிகள், தீட்சிதர்களிடம் கேட்டனர். இதற்கு பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் ஆவணங்களை பொது தீட்சிதர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்தனர்.
இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் எங்களுக்கு ஆய்வு தொடர்பாக முறையான நோட்டீஸ் எதுவும் வரவில்லை. எனவே ஆய்வு நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.