கிருஷ்ணகிரியில் நாளை நடக்கிறது: 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்
- ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது.
- அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் நாளை (5ம் தேதி) 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட மேலாளர் (108 ஆம்புலன்ஸ் சேவை) ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
108 சேவை ஒரு கட்டணமில்லாத மருத்துவம், காவல் மற்றும் தீ ஆகிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்க கூடிய முற்றிலும் இலவச சேவையாகும். தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஈ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனத்துடன் அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து தமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது. இந்த ஈ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் நாளை (5ம் தேதி) 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஓட்டுனர் பணிக்கு, நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும், 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். உயரம் 162.5 செ.மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதி யுடைய விண்ணப்ப தாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக கொண்டு வரவேண்டும்.
எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண் பார்வை மற்றும் மருத்துவம் சம்மந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுவர் களுக்கு மாத ஊதியமாக ரூ.15,235 வழங்கப்படும். 10 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். இதே போல் மருத்துவ உதவியாளர் பணிக்கு, பி.எஸ்.சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. (12ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் தகுதியானவர்கள் ஆவர்.
வயது 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இரவு மற்றும் பகல் என சுழற்சி முறையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகத் தேர்வு, உடற்கூறியல், முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பான தேர்வு, மனிதவள துறை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,435 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். (பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்). மேலும், விவரம் அறிய விரும்புவோர் 044-28888060, 75, 77 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட மேலாளர் ரஞ்சித் (செல்போன் எண்.7550061108) தெரிவித்துள்ளார்.