உள்ளூர் செய்திகள்

கோவையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

Published On 2022-09-14 09:49 GMT   |   Update On 2022-09-14 09:49 GMT
  • கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • தக்காளி பயிர் செய்து அறுவடை செய்யும் வரை இந்த விலையேற்றம் இருக்கும்

கோவை

கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கர்நாடகா, ஆந்திரா, பகுதிகளில் இருந்து தக்காளி வருகிறது.

இதைத் தவிர கோவை தொண்டாமுத்தூர், மதுக்கரை, பாலத்துறை, நாச்சிபாளையம், காளாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

மார்க்கெட்டுகளுக்கு வரும் இந்த தக்காளியை சில்லரை வியாபாரிகள் வாங்கி கடைகளில் விற்பனை செய்கின்றனர்.

இதனிடையே மார்க்கெட்டுகளில் 25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரூபாய் 450 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ஒரு கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 900 வரை விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.

பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதாகவும், இதனால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாகவும், மேலும் முகூர்த்த மற்றும் பண்டிகை தினங்களால் தக்காளி உள்ளிட்ட காய்கறிக்கு அதிக அளவு தேவை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மழை காரணமாக தக்காளி பூக்கள் கருகி விழுந்துள்ளன. இதனால் தற்போது தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகவே தக்காளி ரூ.10 முதல் ரூ.20க்கு விற்பனையாகி வந்தது.

இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். சிலர் தக்காளி விவசாயத்தை கைவிட்டதால் தற்போது வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது.

Tags:    

Similar News