உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரித்தல் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு பேசிய காட்சி. 

கிரிவலப்பாதையை சாமியார்கள் ஆக்கிரமிக்க விடக்கூடாது

Published On 2022-09-10 15:00 IST   |   Update On 2022-09-10 15:00:00 IST
  • திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு இடையூறு
  • அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரித்தல் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் முருகேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் பொதுப்பணித்துைற அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதால் திருவண்ணாமலை நகரத்திற்கு புகழ் சேர்கிறது. இதனால் இங்குள்ள வியாபாரிகள், பொதுமக்கள் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.

நடைபாதையில் சாமியார்கள் தங்குவதற்கும், நடைபாதையில் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்வதற்கும் அனுமதிக்க கூடாது. சாமியார்களுக்கு தங்குவதற்கான தனியான இடம் ஏற்படுத்தப்பட்டு அங்கு அவர்களை தங்க வைக்க வேண்டும்.

கிரிவலப்பாதை நடைபாதையில் சாமியார்கள் தற்காலிக குடியிருப்புகள் அமைக்க கூடாது.

சாமியார்களை முறைப்படுத்த காவல்துறை மூலம் கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிரிவலப் பாதையில் உள்ள மின்விளக்கு வசதிகளை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் கண்காணித்து கிரிவலப் பாதை இருள் சூழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிரிவலப்பாதையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு 100 சதவீதம் இல்லாத அளவிற்கு கண்காணிக்க வேண்டும்.

கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரிப்பதற்காக வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீசார் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் கிரிவலப்பாதையை தொடர்ந்து கண்காணிக்காக வேண்டும்.

ராஜகோபுரம் முன்பு இருந்து அகற்றப்பட்ட தேங்காய், பூ கடைகளை மீண்டும் நடத்த வியாபாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தற்காலிக இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News