உள்ளூர் செய்திகள்

கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்த காட்சி.

மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் தேர்வு செய்யும் பணி - கலெக்டர் ஆய்வு

Published On 2023-08-29 15:28 IST   |   Update On 2023-08-29 15:28:00 IST
  • மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  • 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் 16ந்தேதி வரையிலும் நடைபெற்றது.

பல்லடம்:

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்ததை சரி பார்க்கும் பணி குறித்து பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையம் பகுதியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். மேலும் வீடு வீடாக சென்று விண்ணப்பித்தவர்களின் விவரங்களை சரிபார்த்தார்.

அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் கிறிஸ்துராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.மாவட்டத்தில் 8,18,344 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.1135 ரேசன் கடைகள் உள்ள நிலையில் 1113 விண்ணப்ப பதிவு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த ஜூலை 24 ந்தேதி முதல் ஆகஸ்ட் 4 ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் 16ந்தேதி வரையிலும் நடைபெற்றது. தற்போது விண்ணப்பித்தவர்களின் உரிய பயனாளிகள் தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News