உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அரசு பேருந்துகளில் மகளிரை அலைக்கழிக்கக்கூடாது - டிரைவர், கண்டக்டர்களுக்கு அதிகாரி உத்தரவு

Published On 2022-11-23 07:24 GMT   |   Update On 2022-11-23 07:24 GMT
  • ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

திருப்பூர்:

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும், ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இத்தகைய நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தில் ஏறுவதற்காக பழைய பேருந்து நிலையத்தில் மகளிா் சிலா் காத்திருந்தனா். இதனிடையே பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியபோது மகளிா் சிலா் பேருந்தை நிறுத்தியுள்ளனா். ஆனால், ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

ஆகவே அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும், அலைக்கழிக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் பயணிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அரசுப் போக்குவரத்துகழக திருப்பூா் 2 கிளை மேலாளா் வடிவேலிடம் கேட்டபோது, அரசுப் பேருந்துகளில் மகளிரை அலைக்கழிக்கக்கூடாது என்று ஏற்கெனவே ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆகவே பாதிக்கப்பட்ட மகளிா் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Tags:    

Similar News