உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., 2-ம் மண்டல பாசனத்துக்கு 26ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு - பாசன சபை தலைவர்கள் ஒப்புதல்

Published On 2022-08-19 11:33 GMT   |   Update On 2022-08-19 11:33 GMT
  • பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
  • காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும்.

உடுமலை :

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலகத்தில் நடந்தது.

இதில் பாசன சபை தலைவர்கள் பேசுகையில், பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. வரும் 26ந் தேதி முதல் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்க வேண்டும்.வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும். சுற்று எண்ணிக்கையை குறைத்தால் நாட்கள் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதல் தண்ணீர் வழங்க சாத்தியம் உள்ளதா என ஆலோசிக்க வேண்டும்.இரண்டாம் மண்டல பாசனத்துக்கு சுற்று எண்ணிக்கை குறைக்க காண்டூர் கால்வாய் பணிகள் தான் காரணமா அல்லது உபரியாக நீர் வீணாக சென்றதால் குறைத்து வழங்கப்படுகிறதா என விளக்கமளிக்க வேண்டும்.கடந்தாண்டை போன்று எத்தனை சுற்று தண்ணீர் வழங்கலாம். இவ்வளவு எடுக்கிறோம், எத்தனை நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் உள்ளிட்ட விபரங்கள் முறையாக தெரிவிக்க வேண்டும். சமமான நீர் பங்கீடு வழங்க வேண்டும். நீர் வழங்குவது குறித்து அட்டவணை அனைவருக்கும் வழங்க வேண்டும்.

கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் கூறுகையில்,காண்டூர் கால்வாய் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் 5 சுற்றுக்கு பதிலாக 4 சுற்று தண்ணீர் வழங்கலாம். அதன் பின் உரிய இடைவெளி கிடைப்பதால் பணிகள் தாமதமின்றி மேற்கொள்ள முடியும்.திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் கோரிக்கையின் படி, வரும் 26ந் தேதி தண்ணீர் திறப்பது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.காண்டூர் கால்வாய் பணிகள் தாமதமின்றி முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுற்று எண்ணிக்கை குறைக்க கேட்டோம். வாட்டர் பட்ஜெட் போட்டதும் எவ்வளவு மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும்.

திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறுகையில், வரும் 26ந் தேதி தண்ணீர் திறக்க பாசன சபை தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனங்களுக்கு ஒரு சுற்று குறைத்து தலா 4 சுற்று வீதம் தண்ணீர் வழங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அதிகாரிகள் பேசுகையில், மொத்தம் 72 கோடி ரூபாய் செலவில் காண்டூர் கால்வாய் பணிகளை முடிக்க, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.அதற்கு பாசன சபை தலைவர்கள், நல்லாறு பகுதியில் மேற்கொண்ட பணிகள் முடிவடைந்த நிலையில், மீதம் உள்ள பணிகளை, ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டால் பாசனம் பாதிக்காது. இது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News